Saturday, January 9, 2010

தாய் தின்ற மண்ணே...!

தாய் தின்ற மண்ணே...!
இது பிள்ளையின் கதறல்... ஒரு பேரரசன் புலம்பல்...

நெல்லாடிய நிலம் எங்கே..? சொல்லாடிய அவை எங்கே..?
வில் ஆடிய களம் எங்கே..? கல் ஆடிய சிலை எங்கே..?
தாய் தின்ற மண்ணே...! தாய் தின்ற மண்ணே...!

கயல் விளையாடும் வயல் வெளி தேடி.. காய்ந்து கழிந்தன கண்கள்..
காவிரி மலரின் கடி மனம் தேடி,கருகி முடிந்தது நாசி...
சிலை வழி மேவும் உளி ஒலி தேடி, திருகி விழுந்தன செவிகள்..
ஊன்பொதி சோற்றின் தேன் சுவை கருதி, ஒட்டி உலர்ந்தது நாவும்..
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் , எலிக்கறி பொரிப்பதுவோ...
காற்றை குடிக்கும் தாவரமாகி காலம் கழிப்பதுவோ...
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை..
மன்னன் ஆளுவதோ... மன்னன் ஆளுவதோ...
தாய் தின்ற மண்ணே...! தாய் தின்ற மண்ணே...!


நொறுங்கும் உடல்கள்.. பிதுங்கும் உயிர்கள்..
அழுகும் நாடு.. அழுகின்ற அரசன்..
பழம் தின்னும் கிளியோ , பிணம் தின்னும் கழுகோ..
தூதோ முன் வினை தீதோ..
கலன்களும் அதிர.. களிறுகள் பிளிற...
சோழம் அழைத்து போவாயோ....
தங்கமே எம்மை தாய் மண்ணில் சேர்த்தால் புரவிகள் போலே புரண்டிருப்போம்..
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை, அருவிகள் போலே அழுதிருப்போம்..
அதுவரை..
அதுவரை.. ஒ...!


தமிழர் காணும் துயரம் கண்டு, தலையை சுற்றும் கோளே.. அழாதே...!
என்றோ ஒருநாள் விடியும் என்று, இரவை சுமக்கும் நாளே, அழாதே...!
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி,உறையில் தூங்கும் வாளே, அழாதே...!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ, என்னோடழும் யாழே, அழாதே.......!

நெல்லாடிய நிலம் எங்கே..? சொல்லாடிய அவை எங்கே..?
வில் ஆடிய களம் எங்கே..? கல் ஆடிய சிலை எங்கே..?
தாய் தின்ற மண்ணே...!
இது பிள்ளையின் கதறல்... ஒரு பேரரசன் புலம்பல்...

-வைரமுத்து